மண்பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு
கூடலூரில் துர்கா பகவதி கோவில் திருவிழாவையொட்டி மண்பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர்.
கூடலூர்
கூடலூரில் துர்கா பகவதி கோவில் திருவிழாவையொட்டி மண்பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர்.
பகவதி கோவில்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள மாக்கமூலாவில் துர்கா பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பள்ளி எழுச்சியும், தொடர்ந்து கணபதி ஹோமமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளங்கள் முழங்க பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
பொங்கலிட்டு வழிபாடு
இதையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி, சுதர்சன ஹோமங்களும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கோவில் முன்பு ஏராளமான பெண்கள் மண்பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில் அர்ச்சகர் பொங்கல் பானைகளுக்கு தீபாராதனை காண்பித்தார். அப்போது பெண்கள் குலவையிட்டனர். பின்னர் மதியம் 12 மணிக்கு உச்சிகால மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அகல் விளக்கு ஊர்வலம்
மாலை 6 மணிக்கு பெண்கள் அகல் விளக்குகள் ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் துர்கா பகவதி அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேர் மற்றும் அகல் விளக்கு ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.
பின்னர் இரவு 8 மணிக்கு 1001 தீபங்கள் கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story