‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 7 April 2022 9:41 PM IST (Updated: 7 April 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்வாரியத்தின் துரித நடவடிக்கை

சென்னை எம்.ஜி.ஆர். நகர் கபிலர் தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக மின்கம்பம் சரி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும், புகாரை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்து உள்ளனர்.

மழைநீர் வடிகால்வாயின் மூடி சரிசெய்யப்பட்டது

சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள சாலையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயின் மூடி சாலையிலிருந்து சற்று உயர்ந்து இருப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் வடிகால்வாயின் மூடியை சரி செய்துள்ளனர். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.


ஆபத்தை விளைவிக்கும் பள்ளம்

சென்னை கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மழைநீர் கால்வாயை சீரமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், கால்வாய் சீரமைக்கப்படாமலே அந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, கால்வாய் பணியை விரைவில் முடித்து ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பள்ளத்தை மூடுவார்களா?

- கமல் நாத், கொருக்குப்பேட்டை.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சென்னை ராயப்பேட்டை மீர்சாகிப் பேட்டை மார்க்கெட் எதிரே உள்ள பகுதியில் கழிவு நீர் வெளியேறி சாலையிலேயே தேங்கி விடுகிறது. இந்த நிலை கடந்த 1 வாரமாக தொடர்வதால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவும், சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

- ஷெரீப், ராயப்பேட்டை.



பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிடம்

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள பொது கழிப்பிடம் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இந்த பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.

- பொதுமக்கள்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, டாக்டர் அம்பேத்கர் தெருவிலுள்ள மின் இணைப்பு பெட்டியின் வயர்கள் ஆபத்தான முறையில் தரையில் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்வாரியம் ஆய்வு செய்து, இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும்.

- சமூக ஆர்வலர்.



சாலை சீரமைக்கப்பட வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கன்னிவாக்கம் கிராமம் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக இந்த நிலை நீடித்து வருவதால் சேதமடைந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும்.

- சுரேஷ், கன்னிவாக்கம்.

பாதாள சாக்கடைக்கு மூடி எங்கே?

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் உள்ள பாதாள சாக்கடை திறந்த நிலையில் இருக்கிறது. மேலும், இந்த தெருவில் பள்ளிக்கூடம் இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பாதாள சாக்கடையை விரைவில் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- தெரு மக்கள், ரங்கநாதபுரம்.


நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

செங்கல்பட்டு மாவட்டம் கேம்ப் சாலை சந்திப்பில் உள்ள சேலையூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால், வெயில் மற்றும் மழை காலத்தில் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே பஸ்சுக்காக காத்திருக்கும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் வெயிலிலேயே காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. ஆகையால் நிழற்குடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.

- பயணிகள், சேலையூர்.

சேதமடைந்த மின்கம்பம் கவனிக்கப்படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கே.கே. நகர் குறிஞ்சி தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தும் இருப்பதால் எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் கீழே விழுந்துவிடலாம். எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, இந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

- தெருமக்கள், கே.கே.நகர்.





Next Story