ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்,
கடலூர் அருகே உள்ள தியாகவல்லியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் கோபிநாதன் (வயது 28), ஓட்டல் ஊழியர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்காக சென்றார்.
அப்போது அங்கு வந்திருந்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன், கோபிநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 22.7.2020 அன்று கோபிநாதன், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவர், அந்த சிறுமியை தான் வேலை பார்த்து வந்த ஓட்டலுக்கு கடத்தி சென்று, அங்கு வைத்தும் பலாத்காரம் செய்தார்.
10 ஆண்டு சிறை
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாதனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட கோபிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூகநல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story