டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம். திறக்கக்கோரி ஆண்களும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம். திறக்கக்கோரி ஆண்களும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2022 10:22 PM IST (Updated: 7 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு போட்டியாக கடையை திறக்ககோரி ஆண்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு போட்டியாக கடையை திறக்ககோரி ஆண்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை கடந்த மாதம் திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியின் அருகே டாஸ்மாக் திறந்ததால் குடிமகன்களால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக நேரிடும். மேலும் இந்த பகுதியில் சாலை விபத்து, வழிப்பறி உள்ளிட்டவை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையடுத்து அந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அந்த கடை மீண்டும் திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பெண்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் 12 மணியளவில் வழக்கம்போல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. சிறிதுநேரத்தில் அங்கு வந்த மாதர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கையில் பூட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே அங்கு மதுபானங்கள் வாங்க வந்த 20-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று போட்டியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பெண்களும், டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என ஆண்களும் ஒரே நேரத்தில் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

எங்களால் தான் வருமானம்...

இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களை பாலாற்று பகுதிக்கு செல்லும்படி கூறி அங்கிருந்து விரட்ட முயன்றனர். அப்போது அவர்கள், எங்களால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நாங்கள் குடிக்கவில்லை என்றால் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியாது. எனவே டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று கூறி அங்கிருந்து செல்ல மறுப்பு தெரிவித்ததுடன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது மதுப்பிரியர்கள் வேண்டும்... வேண்டும்... டாஸ்மாக் கடை வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டனர். மாதர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பெண்கள் அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மனு எழுதி கையொப்பமிட்டு, அதனை டாஸ்மாக் அதிகாரியிடம் வழங்கும்படி போலீசாரிடம் அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் டாஸ்மாக் கடையில் வழக்கம்போல் மது விற்பனை செய்யப்பட்டது. மதுப்பிரியர்கள் அதனை உற்சாகத்துடன் வாங்கி சென்றார்கள்.

Next Story