தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2022 10:30 PM IST (Updated: 7 April 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் செந்தில்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வமணி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். தெய்வமணிக்கும், இளங்கியனூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெய்வமணி, வீட்டை விட்டு வெளியேறி ரவியுடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செந்தில்குமார், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இருப்பினும் தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் செந்தில்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார், தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சின்னதுரை, தனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, கள்ளக்காதலனுடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story