மாவட்ட மைய நூலகத்திற்கு வார விடுமுறை கிடையாது


மாவட்ட மைய நூலகத்திற்கு வார விடுமுறை கிடையாது
x
தினத்தந்தி 7 April 2022 10:38 PM IST (Updated: 7 April 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

அரசு போட்டித்தேர்வு முடியும் வரை மாவட்ட மைய நூலகத்திற்கு வார விடுமுறை கிடையாது என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நூலகத்தில் உள்ள வாசகர்கள் பகுதி, புத்தகங்கள் இருக்கும் அறை மற்றும் கணினி பயிற்சி வழங்கும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டதுடன் நாள்தோறும் வரும் வாசகர்களின் தேவைக்கேற்ப குடிநீர், கழிப்பறை வசதி போதிய அளவு உள்ளதா என்பதை அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுடன் கலெக்டர் மோகன், கலந்துரையாடியதோடு அங்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். அதன் பிறகு அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவையான புத்தகங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டித்தேர்விற்கு பலரும் தயாராகி வருகின்றனர். அவர்களுடன் கலந்துரையாடியதுடன் மாவட்ட மைய நூலகத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட மைய நூலகத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் போட்டித்தேர்விற்காக தயாராகி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. அவர்களுடன் கலந்துரையாடியபோது போட்டித்தேர்வில் முதல்நிலை தேர்விற்கு மட்டுமே புத்தகங்கள் உள்ளன என தெரிவித்ததுடன், நேர்காணல் தேர்விற்கு தேவையான புத்தகங்கள் இல்லை என தெரிவித்தனர். அதோடு அவர்கள், தாங்கள் படிப்பதற்கு தேவையான மேஜை மற்றும் நாற்காலி வசதியை ஏற்படுத்தித்தரும்படியும், கூடுதலாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட மைய நூலகத்தில் அரசு போட்டித்தேர்விற்காக தயாராகி வருபவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பெரிய அளவிலான அட்டை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை ஓரிரு நாட்களில் செய்து தரப்படும். மாவட்ட மைய நூலகத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் அரசு போட்டித்தேர்வுக்கு படித்து வரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று வார விடுமுறையான வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போல் நூலகம் செயல்படும். அரசு போட்டித் தேர்வு முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

உள்கட்டமைப்பு வசதி

மேலும் வாரம் ஒருமுறை அலுவலர்கள் மூலம் நூலகத்தை ஆய்வு செய்வதுடன், மாணவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுவதோடு போட்டித்தேர்வாளர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story