ஆலங்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஆலங்குடியில்  டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 April 2022 10:50 PM IST (Updated: 7 April 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி:
டாஸ்மாக் கடையை மூட வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகாமையில் மற்றொரு இடத்திற்கு அந்த கடையை மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தது. 
இதற்கான பணிகளை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் தற்போது மாற்றப்படும் இடத்தை கடந்துதான் அம்பேத்கர் நகருக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் டாஸ்மாக் கடையால் அந்த பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி சிறுவயதிலேயே உயிர் இழந்து வருகின்றனர். பல இளம் பெண்கள் கணவனை இழந்து கைம்பெண்களாக மாறி வருவதாகவும் தற்போது தங்கள் பகுதிக்கு செல்லும் வழியிலேயே கடை திறக்கப்பட உள்ளதால் மேலும் தங்கள் பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடையை மாற்றாமல் ஒட்டு மொத்தமாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சாலை மறியல் 
மேலும் ஆலங்குடி நகரில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலங்குடி அம்பேத்கர் நகர் பொதுமக்கள் பழைய நீதிமன்ற வளாகம் அருகே ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வடிவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
பேச்சுவார்த்தை 
பின்னர் இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சாலை மறியல் போராட்டத்திலிருந்து டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிக்கொண்டே ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை வட்டாட்சியர் செந்தில் நாயகி தலைமையில் நடை பெற்றது. இதில் மாவட்ட கலால் துறை அதிகாரி வரதராஜன், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 
நாளை பூட்டு போடும் போராட்டம்
மேலும் நாளை (சனிக்கிழமை) அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைக்கு அம்பேத்கர் நகர் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த போ வதாகவும், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story