எஸ்.கே.எம். நிறுவனத்தில் விபத்தில் வாலிபர் இறந்ததால் வன்முறை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் காயம்


எஸ்.கே.எம். நிறுவனத்தில் விபத்தில் வாலிபர் இறந்ததால் வன்முறை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் காயம்
x
தினத்தந்தி 8 April 2022 2:40 AM IST (Updated: 8 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே எஸ்.கே.எம். ஆயில் நிறுவனத்தில் விபத்தில் வாலிபர் இறந்ததால் திடீர் வன்முறை ஏற்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் காயம் அடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே எஸ்.கே.எம். ஆயில் நிறுவனத்தில் விபத்தில் வாலிபர் இறந்ததால் திடீர் வன்முறை ஏற்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் காயம் அடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தனியார்  எண்ணெய் ஆலை
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை உள்ளது. 
இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.
தொழிலாளி சாவு
இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே உள்ள ராம்குருவா பகுதியை சேர்ந்த காமோத்ராம் (வயது 30) என்ற தொழிலாளியும் வேலை செய்து வந்தார்.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆலைக்கு ஆயில்லோடு ஏற்றிச்செல்ல டேங்கர்       லாரி ஒன்று வந்தது. வழக்கம் போல் வேலைக்கு வந்த காமோத்ராம் எதிர்பாராதவிதமாக லாரியில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து காமோத்ராம் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
போராட்டம்
இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 400-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விபத்தில் இறந்த காமோத்ராம் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
வன்முறை
அப்போது வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் கூறுகையில், ‘முதலில் பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்து செல்ல ஒத்துழைக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசி  இழப்பீட்டு தொகை வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். ஆனால் உரிய இழப்பீட்டு தொகை வழங்கிய பின்னர் தான் உடலை எடுத்து செல்ல வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஒரு கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டை மற்றும் கற்களை எறிந்து திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், எண்ணெய் ஆலை நிறுவனத்தின் முன்புறத்தில் உள்ள காவலாளி அறை அடித்து நொறுக்கப்பட்டது.
10 போலீசார் காயம்
அதுமட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 10 போலீசார் காயம் அடைந்தனர். இந்த கலவரத்தில் காயம் அடைந்த போலீசார்   விவரம் வருமாறு:-
1.டி.தீபா, மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர்.
2.டி.ஜான்சன் பால், மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்.
3.பழனிச்சாமி, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.
4.ரவிக்குமார், ஏட்டு.
5.முத்துக்குமார், ஆயுதப்படை போலீஸ்.
6.கார்த்தி, ஆயுதப்படை போலீஸ்.
7.வெங்கடாச்சலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.
8.பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர், வீரப்பன்சத்திரம்.
9.டி.பிரகாஷ், ஏட்டு.
10.பி.கதிர்வேலு, ஏட்டு.
மேற்கண்டவர்கள் படுகாயம் அடைந்ததால் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
 மேலும் இந்த தாக்குதலில் எண்ணெய் ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 4-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட 3 போலீஸ் வாகனங்களும்  அடித்து நொறுக்கப்பட்டன. திடீரென ஏற்பட்ட வன்முறையால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. 
பதற்றம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கவுதம் கோயல், ஜானகிராமன், பாலாஜி மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் வடமாநில தொழிலாளர்கள் பலர் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் 40-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 
இதைத்தொடர்ந்து விபத்தில் இறந்த காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 
போலீஸ் குவிப்பு
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து எண்ணெய் ஆலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை தேடி வருகிறார்கள். 
தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 
இந்த சம்பவத்தால் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story