விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்


விவசாயியின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 8 April 2022 4:29 AM IST (Updated: 8 April 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருச்சி:

விவசாயி
அரியலூர் மாவட்டம் செந்துறை குழுமூர் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 55). விவசாயி. இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு இளையமுருகன், இளவரசன் ஆகிய மகன்களும், இளவரசி என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 4-ந்தேதி மாலை இளங்கோவன் மளிகை கடைக்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
மூளைச்சாவு
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதுபற்றி இளங்கோவனின் மனைவி மற்றும் மகன்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது, இளங்கோவனின் மகன்கள் தங்களது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதுபற்றி மருத்துவமனை டீன் வனிதாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடல் உறுப்புகள் தானம்
அவர் சட்ட விதிகளின்படி, உடல் உறுப்பு தானத்துக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி, இளங்கோவனின் இதயம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், நுரையீரல் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.மேலும் அவருடைய 2 சிறுநீரகத்தில் ஒன்று திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், இரு கண்களும் திருச்சியில் உள்ள கண் வங்கிக்கும் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
விமானத்தில் பறந்த இதயம்
இதற்காக நேற்று மாலை 4 மணிக்கு இளங்கோவனுக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவருடைய இதயத்தை சென்னையில் இருந்து வந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அதை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துச்சென்றனர்.
இதற்காக திருச்சி வடக்கு போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் ஜோசப்நிக்‌சன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரி முதல் விமான நிலையம் வரை சாலையில் வாகன போக்குவரத்தை சில நிமிடங்கள் நிறுத்தி வைத்தனர். இதனால் இதயம் எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் 10 நிமிடங்களில் விமான நிலையத்தை சென்றடைந்தது.
பரபரப்பு
இதேபோல் மற்ற உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக மதுரை மற்றும் நெல்லைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இதையடுத்து இளங்கோவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரி வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Next Story