கல்லூரி வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை


கல்லூரி வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 April 2022 4:27 PM IST (Updated: 8 April 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி 5 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மது அருந்திய மாணவிகள்

காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர், வகுப்பறையில் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு மாணவி குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிப்பதும், அதை மற்றொரு மாணவி வீடியோவாக பதிவு செய்வதும் தெரிகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவியது.

5 பேர் இடைநீக்கம்

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மதுபானம் அருந்திய விவகாரம் தொடர்பாக அவர்களின் பெற்றோர்களை அழைத்து மாணவிகளை எச்சரித்ததுடன், 5 மாணவிகளை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரசு பள்ளி மாணவிகள் பஸ்சில் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story