கூட்டுறவு வங்கியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
கம்பத்தில் உதவித்தொகை வழங்காததால் கூட்டுறவு வங்கியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
கம்பம் :
கம்பம் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், விதவை, முதியோர் உள்ளிட்டோருக்கான மாதந்திர உதவித்தொகை தமிழக அரசால் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கம்பத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3-ந்தேதிக்குள் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்காக வங்கிக்கு வந்தனர். அப்போது வங்கி அதிகாரிகள் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படவில்லை என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் செயலாளர் கருப்பையா தலைமையில் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகையினை காலதாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும், வங்கி நுழைவுவாயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைத்து தரவேண்டும் என கோஷமிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் ரத்தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இனிவரும் காலங்களில் காலதாமதமின்றி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனிதாசில்தார் கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story