போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது
போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது
கோவை
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர். இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கட்சிக்கு எதிராக வேலை செய்ததாக கூறி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை முருகேசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளதாக முருகேசன் கூறி வந்தார். மேலும் பொய் வழக்கு போட்ட போலீசாரை கண்டித்து தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் நேற்று காலை பீளமேடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த முருகேசன், ஒரு பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் ஓடி வந்து அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர்.
அப்போது முருகேசன் போலீசாரிடம், என்னை திடீரென்று கட்சி யில் இருந்து நீக்கி விட்டனர். நான் சுப்பிரமணி என்பவரை தாக்கவில்லை. ஆனால் அவரை தாக்கியதாக பீளமேடு போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். அதை கண்டித்து தீக்குளிக்க முயன்றேன் என்று கூறினார்.
இதையடுத்து முருகேசன் மீது தற்கொலைக்கு முயன்றது, பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story