புதுப்பெண் அடித்து கொலை
திருக்கோவிலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நேரு மகன் விஜயராஜ்(வயது 30). கார் டிரைவர். இவருக்கும் ஜம்படை கிராமத்தை சேர்ந்த தணிகைமலை மகள் மேனகா(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று மாலையில் தனது வீட்டு மாடியில் மேனகா செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது விஜயராஜ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.
அடித்து கொலை
நீண்ட நேரமாகியும் செல்போனை வைக்காமல் மேனகா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். இதைபார்த்த விஜயராஜ், சத்தம்போட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயராஜ் தனது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு, அருகில் கிடந்த பிளாஸ்டிக் பைப்பால் மேனகாவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் கைது
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் மேனகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நேரம் செல்போன் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை அடித்துகொலை செய்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story