தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி
ஆபத்தான மின்சார டிரான்ஸ்பார்மர்
அரக்கோணத்தை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கும்பினிபேட்டை மின் அலுவலகத்துக்கு உட்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் சாலையோரம் உள்ளது. அந்த மின் கம்ப சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையோரம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோ, அரக்கோணம்.
ஆட்டோவில் ஆபத்தான பயணம்
பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செல்வதுபோல, குடியாத்தம்-மேல்பட்டி சாலையில் சென்ற ஒரு ஆட்டோவில் கைப்பிடி கம்பி மீது அமர்ந்து ஒருவர் ஆபத்தான நிலையில் பயணம் செய்தார். அந்தப் பயணியின் உடல் பாதியளவு வெளியே தெரியும்படி இருந்தது. ஆட்டோவை கடந்து செல்லும் வாகனங்களால் பயணிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இதுபோன்ற எந்த ஒரு ஆட்டோ டிரைவர்களும் பயணிகளை ஆபத்தான நிலையில் அமர வைத்து ஓட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
-கோதண்டராமன், கே.வி.குப்பம்.
பயணிகள் நிழற்குடை வசதி தேவை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு பகுதியில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லாமல் காஞ்சீபுரம், வந்தவாசி செல்லும் பயணிகள் நிற்க இடமில்லாமல் கடும் வெயிலில் பஸ்சுக்காகக் காத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க மக்கள் நல பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முன்வர வேண்டும்.
-அக்பர்பாஷா, மாங்கால்.
ஸ்மார்ட் சிட்டி சாலையோரம் ஓட்டைகள்
வேலூர் அருகே சத்துவாச்சாரியில் ஆர்.டி.ஓ சாலையில் இருந்து கோர்ட்டுக்கு திரும்பும் சவுத் அவென்யூ ரோடு பகுதி ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்து தார்சாலை போடப்பட்டுள்ளது. இங்கு சாலை ஓரத்தில் தார் தரமாக போடாத காரணத்தால் ஓட்டைகள் விழுந்து பள்ளமாக உள்ளது. அருகே உள்ள கடைக்காரர்கள் கற்களை போட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவசுப்பிரமணியம், சத்துவாச்சாரி.
கோட்டை அகழியை சுத்தம் செய்ய வேண்டும்
வேலூர் கோட்டை அகழி சமீபத்தில் தான் தூர்வாரும் பணி நடந்து முடிந்தது. கோட்டையைச் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒருசிலர் கோட்டை வளாகத்தில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் அருகே உள்ள அகழியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் ஏராளமாக தேங்கி கிடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டை வளாகத்தில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் அகழியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
வீணாக வெளியேறும் குடிநீர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா புளியங்கண்ணு திருவள்ளுவர் நகர் பவானியம்மன் கோவில் தெருவில் வாரத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் ஓரிடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எலிசா, புளியங்கண்ணு.
Related Tags :
Next Story