பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி 2 வாலிபர்கள் பலி


பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 9 April 2022 12:45 AM IST (Updated: 9 April 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே புளியமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 2 வாலிபர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதில் தள்ளி நின்றிருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பெரம்பலூர்
நண்பர்கள்
பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் செல்லதுரை (வயது 26). இவர் நேற்று மதியம் தனது நண்பர்களான கவுல்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமர்(26), பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் வெங்கடேசன் என்ற எலி(18) ஆகியோருடன், கோனேரிபாளையம் அருகே சோமாண்டாபுதூர் கிராம எல்லையில் உள்ள தனது பெரியப்பா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டிற்கு சென்றார். அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்தது. இதனால் அவர்கள் மழைக்கு ஒரு புளியமரத்தடியில் ஒதுங்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
மின்னல் தாக்கி பலி
இந்த நிலையில் அருகே அமர்ந்து கொண்டிருந்த வெங்கடேசன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சற்று தூரமாக சென்று விட்டார். இந்த நிலையில் செல்லதுரையும், ராமரும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் திடீரென்று பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லதுரையும், ராமரும் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது வெங்கடேசன் அங்கு இல்லாததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும் மின்னல் தாக்கிய அதிர்வில் வெங்கடேசனுக்கு 2 கால்களும் சிறிது நேரம் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளது. மின்னல் தாக்கிய சத்தத்தை கேட்ட அருகே உள்ள வயல்காட்டை சேர்ந்தவர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் முதலில் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு செல்லதுரை, ராமரின் குடும்பத்தினர், உறவினர்கள் வந்தனர். அவர்கள் செல்லதுரை, ராமர் ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து செல்லதுரை, ராமர் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த 2 பேருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. என்ஜினீயரிங் முடித்துள்ள செல்லதுரை பெரம்பலூரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ராமர் பெரம்பலூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் தொகை வசூலிப்பவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story