காணாமல் போன ரூ.15 லட்சத்திலான 111 செல்போன்கள் மீட்பு
குமரி மாவட்டத்தில் காணாமல்போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஒப்படைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் காணாமல்போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஒப்படைத்தார்.
ரூ.15 லட்சம் செல்போன்கள்
குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் ரூ.15 லட்சம் மதி்ப்புள்ள 111 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். மேலும், செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசாரை அவர் வெகுவாக பாராட்டினார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒப்படைப்பு
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் கிரைம் போலீசார் கடந்த ஒரு வருடமாக பல்வேறு போலீஸ் நிலைய பகுதிகளில் காணாமல் போனதாக புகார் பெறப்பட்டவர்களின் செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர் நடவடிக்கையாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் குறித்த விவரங்களை போலீசுக்கு 7010363173 என்ற இலவச வாட்ஸ்-அப் எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். இந்த எண்ணுக்கு வரும் தகவல்கள் எனது செல்போனில்தான் இருக்கும். எனவே அந்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
63 தகவல்கள்
போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுப்பதற்கு முன்பாக அந்த தகவல்கள் உண்மைதானா? என்பதை ஆய்வு செய்வோம். இந்த எண்ணுக்கு கடந்த ஒரு வாரத்தில் 63 தகவல்கள் வந்துள்ளது. அதில் 11 தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.
மாலை நேரங்களிலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் குற்ற சம்பவங்கைளை கட்டுப்படுத்த போலீசார் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை. 150 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு, மின்சப்ளை பிரச்சினை போன்றவற்றால் செயல்படாமல் இருக்கிறது. எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சட்டவிரோத செயலுக்கு அனுமதியில்லை
குமரி மாவட்டத்தில் எந்த சட்டவிரோத செயலும் நடைபெற அனுமதியில்லை. அனுமதிக்கவும் மாட்டோம்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
பேட்டியின்போது உதவி சூப்பிரண்டு (பயிற்சி) விவேகானந்த சுக்லா, கூடுதல் சூப்பிரண்டுகள் வேல்முருகன், ராஜேந்திரன், நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story