கோவைக்கு மாற்றுப்பாதை அமைக்க பணிகள் தொடங்குவது எப்போது பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கோவைக்கு மாற்றுப்பாதை அமைக்க பணிகள் தொடங்குவது எப்போது பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 9 April 2022 10:49 AM IST (Updated: 9 April 2022 10:49 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் இருந்து கிராமப்பகுதி வழியாக கோவைக்கு மாற்றுப்பாதை அமைக்க பணிகள் தொடங்குவது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் இருந்து கிராமப்பகுதி வழியாக கோவைக்கு மாற்றுப்பாதை அமைக்க பணிகள் தொடங்குவது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

கோவைக்கு மாற்றுப்பாதை 

பொள்ளாச்சி-கோவை இடையே 4 வழிச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. பஸ், கார், கண்டெய்னர் லாரி, இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்பட தினமும் 10 ஆயிரம் வாகனங்கள் சென்று வருவதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

 இதில் 7 ஆயிரம் கார் மட்டும் சென்று வருகின்றன. வாகன பெருக்கம் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மேலும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகின்றன. 

கோவைக்கு பொள்ளாச்சி ரோட்டை தவிர்த்து, கிராமங்கள் வழியாக மாற்றுப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

நில அளவீடு

 இதற்கான நிலஅளவீடு பணிகளை வேகமாக தொடங்கியது. கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் பிரிவில் இருந்து காணியாலாம்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டி பாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம், மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம் மற்றும் போத்தனூர் செட்டிபாளையம் வரை இந்த மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது.

இதற்காக வருவாய் துறையினர் நில அளவீடு பணிகள் மேற்கொண்டு எல்லை கற்களும் அளவீடு செய்யப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

கணக்கெடுக்கும் பணி

ரூ.67¾ கோடியில் அமைக்கப்படும் இந்த மாற்றுப்பாதையின் நீளம் 23.7 கி.மீ. ஆகும். தற்போது இந்த சாலை 8 மீட்டர் அகலத்தில் இருக்கிறது. அதை 16 மீட்டராக அகலப்படுத்தவும், நல்லட்டிபாளையம், பட்டணம் ஆகிய கிராமங்களில் சிறு பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இன்னும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. 

இந்த நிலையில் தற்போது உள்ள இந்த சாலையில் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. எனவே இந்த சாலையில் எப்போது பணி தொடங்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.  

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவை- பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இதனால் அதில் செல்ல பலர் பயந்து இந்த மாற்றுப்பாதையைதான் பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த சாலையை அகலப்படுத்தி கொடுக்கும்போது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் உடனடியாக பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என்றனர்.


Next Story