புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மின்கம்பத்தில் மோதியது
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
பொள்ளாச்சி
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
மின்கம்பத்தில் மோதிய கார்
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் ரூ.52 கோடியே 47 லட்சத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இரவு 11.30 மணிக்கு பாலக்காடு நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
பாலம் ஏறி இறங்கும் போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடதுபுறமாக திருப்பியதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி மோட்டார் சைக்கிள் மீது உரசியப்படி ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
மின்தடை
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சிவகாசியை சேர்ந்த அசோக் குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் மின்கம்பம் சேதம் அடைந்தது. இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக சக்தி கார்டன், சரவணன் வீதி மற்றும் பாலக்காடு ரோட்டில் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த இதனால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
இதையடுத்து நேற்று காலையில் சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணி நடந்தது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் 8 மணி நேரத்திற்கு பிறகு மின்வினியோகம் சீரானது.
திரும்ப வழி
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் மேம்பாலம் இறங்கும் பகுதியில் சிறிது தூரத்தில் வாகனங்கள் திரும்புவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த வழியை அடைத்தால்தான் விபத்து ஏற்படாது என்றனர்.
Related Tags :
Next Story