குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்


குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
x
தினத்தந்தி 9 April 2022 5:44 PM IST (Updated: 9 April 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

காட்டு யானைகள்

குடியாத்தம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இந்த கூட்டத்தை விட்டு பிரிந்த இரண்டு யானைகள் கடந்த சில தினங்களாக குடியாத்தம் அடுத்த மோர்தானா, சைன குண்டா, ஆம்பூராம்பட்டி, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, மோடி குப்பம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

 இரண்டு யானைகள் சைனகுண்டாவிலிருந்து மோர்தனா செல்லும் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலகிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் மாந்தோப்புக்குள் புகுந்து மாமரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

சாலையில் நின்று

மேலும் சைனகுண்டா பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடி அருகே யானைகள் வந்து பிளிறியபடி இருந்தது. இதனால் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். கிராம மக்களும் அச்சமடைந்தனர்.

சைனகுண்டாவிலிருந்து மோர்தானா கிராமத்திற்கு சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும். இரவு நேரங்களில் இரண்டு யானைகள் மோர்தானா கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல நிமிடங்கள் நின்று பிளிறியபடி இருப்பதாகவும், இதனால் கிராமத்திற்கு செல்லும் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story