‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் பயணிகள் நிழற்குடைக்கு அருகில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதனருகில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் காலி பாட்டில்களை கழிப்பிடத்துக்குள் வீசிவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் பாட்டில்களை உடைத்து போட்டுவிடுகின்றனர். இதனால் அங்கு இயற்கை உபாதைகளை கழிக்க சென்று வரும் பயணிகள் காயம் அடைகின்றனர். குறிப்பாக பெண்கள் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தவே அச்சப்படுகிறார்கள். எனவே மதுப்பிரியர்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனிதா, பந்தலூர்.
நீரோடை தூர்வாரப்படுமா?
கோத்தகிரி கடைவீதி பகுதியில் இருந்து டோபிகானா வழியாக நீரோடை செல்கிறது. இந்த நீரோடை தண்ணீரை நம்பி ஏராளமான சலவை தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் தற்போது நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து நீரோட்டம் தடைபட்டு உள்ளது. இதனால் சலவை தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதர் செடிகளை அகற்றி ஓடையை முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வன், கோத்தகிரி.
தேங்கி கிடக்கும் கழிவுகள்
கோவைப்புதூர் அருகே பி.கே.புதூர் ராமானுஜம் நகரில் குளத்துப்பாளையம் செங்குளத்தில் இருந்து உபரி நீர் செல்லும் நீரோடை உள்ளது. இந்த நீரோடையில் கழிவுநீர் தேங்கி சாக்கடை போல மாறிவிட்டது. அதில் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் நீரோட்டம் தடைபட்டு உள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த நீரோைடயை பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
நாகராஜ், கோவை.
சேதமடைந்த இருக்கைகள்
கோவையில் இருந்து கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சில பஸ்களில் உள்ள இருக்கைகள் கிழிந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால் அந்த இருக்கைகளில் அமரும் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுத்தம் இல்லாத நிலையும் காணப்படுகிறது. எனவே அரசு பஸ்களில் சேதம் அடைந்த இருக்கைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிமாறன், கோவை.
சாலையில் குழி
கோவை பாலசுந்தரம் சாலையில் பி.ஆர்.எஸ். காவலர் பயிற்சி பள்ளி நுழைவு வாயில் அருகே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழி, கடந்த சில மாதங்களாக சரியாக மூடப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழியில் ஏறி இறங்கும் வாகனங்கள் திடீரென பழுதாகி விடுகின்றன. எனவே அந்த குழியை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவராஜ், கோவை.
சுத்தமில்லாத சாக்கடை கால்வாய்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் வெங்கடேசா காலனி உள்ளது. இங்குள்ள சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே வெங்கடேசா காலனியில் முறையாக சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்த பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்மல், பொள்ளாச்சி.
தொற்று நோய் பரவும் அபாயம்
கோவை சித்தாபுதூரில் மின் மயானம் உள்ளது. இந்த மின் மயானம் அருகே காலியிடம் இருக்கிறது. இங்கு இறந்தவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய ஆடைகள், மெத்தைகள், தலையணை, பாய், மாலைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து போட்டு செல்கிறார்கள். இதனை அப்புறப்படுத்தாததால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
சந்துரு, சித்தாபுதூர்.
நடைபாதையில் சுற்றித்திரியும் மாடுகள்
கோவை வாலாங்குளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக குளக்கரையில் நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மாடுகள் நடைபாதையில் சுற்றி வருவதால், இங்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல், உக்கடம்.
கிழிந்து தொங்கும் திரை
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் வழிகாட்டி பலகை உள்ளது. இதன் பின்புறம் மிகவும் கிழிந்த நிலையில் பிளாஸ்டிக் திரை தொங்குகிறது. இது எந்த நேரத்திலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த திரையை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கூடலூர்,
குப்பைகள் அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே வீடுகளில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுவதால் அந்த பகுதி குப்பை கிடங்கு போன்று காட்சி அளிக்கிறது. விளையாடும் மைதானம் அருகில் குப்பை கொட்டப்படுவதால், அங்கு விளையாடும் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், கிணத்துக்கடவு.
Related Tags :
Next Story