தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த விழுப்புரம் மாணவர்
அகில இந்திய மல்லர்கம்ப விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த விழுப்புரம் மாணவருக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மல்லர்கம்ப விளையாட்டு போட்டிகள் கடந்த 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் அனுமந்த் பகுதியில் உள்ள குஷால்தாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய அளவில் மொத்தம் 51 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 6 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் இருந்து 12 மாணவர்கள் கலந்துகொண்டதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் படித்து வரும் மல்லன் ஹேமச்சந்திரன், மல்லர்கம்ப தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தங்கம் வென்ற விழுப்புரம் மாணவர்
இதன் மூலம் மல்லர்கம்ப தனித்திறன் போட்டியில் தமிழ்நாட்டில் தங்கப்பதக்கம் வென்ற 2-ம் நபர் என்ற பெருமையை மல்லன்ஹேமச்சந்திரன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப்பில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் சார்பில் தங்கப்பதக்கம் வென்ற முதலாவது நபர் என்ற பெருமையை விழுப்புரத்தை சேர்ந்த ஆதித்யன் என்ற மாணவர் பெற்றிருந்தார். மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில், இதுவரை தங்கப்பதக்கம் வென்ற ஆதித்யன், மல்லன் ஹேமச்சந்திரன் ஆகிய இருவரும் விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்தவர்கள் ஆவர்.
உற்சாக வரவேற்பு
இதையடுத்து ராஜஸ்தானில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை விழுப்புரம் வந்த மாணவன் மல்லன் ஹேமச்சந்திரனுக்கு தமிழ்நாடு மற்றும் விழுப்புரம் மல்லர் கம்பம் சார்பில் ஆளுயர மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மல்லர்கம்ப நிர்வாகிகள், மாணவர் மல்லன் ஹேமச்சந்திரனை அவர் படித்து வரும் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரிக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். இவரை கல்லூரி முதல்வர் சிவக்குமார், பேராசிரியர் மகாவிஷ்ணு, பொருளியல் துறைத்தலைவர் சக்திவேல், உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story