கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு ஊர்வலம்-மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:
விழிப்புணர்வு ஊர்வலம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி சமரச நாள் கிருஷ்ணகிரி மாவட்ட சமரச மையத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.கலைமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி பேசியதாவது:-
நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த சமரச மையத்தில் எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.
சுமூக தீர்வு
மேலும் வக்கீல்களும் கலந்து கொண்டு புகார்தாரருக்கு உதவலாம். இதில் பயிற்சி பெற்ற சமரசர்கள் சமரச பேச்சு வார்த்தைக்கு ஏதுவாக வழிகாட்டுவார்கள். இதன் மூலம் வழக்குகளில் மேல்முறையீடு இன்றி, விரைவாகவும், இறுதியாகவும் சுமூக தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பி.வேல்முருகன், சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி.மணி, தலைமை குற்றவியல் நடுவர் ராஜாசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி பி.கணேசன், கூடுதல் சார்பு நீதிபதி சி.குமாரவர்மன், குற்றவியல் நடுவர் செந்தில்பாபு, கூடுதல் மகளிர் நீதிமன்ற நடுவர் ஜெ.பவித்ரா மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நோட்டீசுகள் வினியோகம்
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ராயக்கோட்டை சாலையில் சென்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story