ஆண்டகளூர்கேட்டில் தாபா ஓட்டலில் தச்சு தொழிலாளி சாவு-போலீசார் விசாரணை
ஆண்டகளூர்கேட்டில் தாபா ஓட்டலில் தச்சு தொழிலாளி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் பூவரசன் (வயது 29), தச்சு தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். நேற்று முன்தினம் இரவு பூவரசனும், அதே ஊரை சேர்ந்த அவருடைய நண்பரான முனிராஜாவும் ஆண்டகளூர் கேட்டில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்டலில் இருவரும் சாப்பிட்டுள்ளனர். போதை அதிகமாகிவிடவே இருவரும் அங்குள்ள ஒரு அறையில் படுத்து தூங்கி விட்டனர். காலையில் முனிராஜா எழுந்து விட்டார். அதே நேரத்தில் ஓட்டலில் வேலை பார்க்கும் ரங்கநாதன் என்பவர் வந்து பார்த்தபோது பூவரசன் படுத்து கிடந்த நிலையில் இருந்துள்ளார். ரங்கநாதன் அவரை எழுப்பி உள்ளார். ஆனால் பூவரசன் எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் அங்கிருந்தவர்கள் பூவரசன் இறந்து விட்டதை அறிந்தனர்.
இதுபற்றி பூவரசனின் தாயார் காவேரி (45) ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போதை அதிகமாகி உணவுக்குழாயில் உணவு செரிக்காமல் தங்கிவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பூவரசன் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள தாபா ஓட்டலில் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story