தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து பெண் சாவு


தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து பெண் சாவு
x
தினத்தந்தி 10 April 2022 6:56 PM IST (Updated: 10 April 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விபத்து
தூத்துக்குடி ராம்தாஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 52). இவர்கள் நேற்று மதியம் தனது உறவினர்களுடன் ஒரு வேனில் இருக்கன்குடிக்கு புறப்பட்டனர். அந்த வேனில் மொத்தம் 12 பேர் இருந்தனர். அவர்கள் தூத்துக்குடி அய்யனார்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக வேன் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி உள்ளது. இதில் நிலைதடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 12 பேரும் காயம் அடைந்தனர். இசக்கியம்மாள் மட்டும் பலத்த காயம் அடைந்தார்.
சாவு
இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். விபத்து குறித்தும் விசாரணை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகணேஷ், சிவக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story