தினமும் ஊருக்குள் நுழையும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதி


தினமும் ஊருக்குள் நுழையும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 10 April 2022 8:04 PM IST (Updated: 10 April 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தினமும் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

கூடலூர்

கூடலூர் அருகே தினமும் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

ஊருக்குள் வரும் காட்டுயானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடைகாலமாக உள்ளதால், அங்குள்ள வனப்பகுதியில் பசுந்தீவன மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கிவிட்டது. கூடலூர் அருகே செளுக்காடி பகுதியில் காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறது. தினமும் காலை 7 மணிக்கு முக்கிய சாலைகள் வழியாக திடீரென நடந்து வருகிறது. 

இதன் காரணமாக விவசாயிகள், மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பீதியுடன் சாலையில் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. சில சமயங்களில் பொது மக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. மேலும் வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். 

நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்து வரும் வனத்துறையினரும், அந்த காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே காட்டுயானையை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக காட்டு யானைகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது வனப்பகுதியில் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் மீண்டும் ஊருக்குள் வர தொடங்கிவிட்டது. எனவே வனப்பகுதியில் பசுந்தீவனங்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story