திருமருகல் பகுதியில் கனமழையால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிப்பு
திருமருகல் பகுதியில் பெய்த கனமழையால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திட்டச்சேரி:-
திருமருகல் பகுதியில் பெய்த கனமழையால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உளுந்து அறுவடை
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பயறு மழை நீரில் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பணிகள் பாதிப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த முறை குறுவை, சம்பா, தாளடி பயிர்களை ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து சாகுபடி செய்தோம். அப்போது பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது கனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது உளுந்து, பயறு சாகுபடி செய்து அறுவடை பணிகளை தொடங்கி உள்ள நேரத்தில் கனமழை பெய்து உள்ளது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்படுவதுடன், மகசூல் இழப்பும் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story