50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
சின்னமனூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு 50 ஆயிரம் வாைழ மரங்கள் சேதமாகின.
உத்தமபாளையம்:
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில் பச்சை ரகம், நேந்திரம் மற்றும் செவ்வாழை ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்தப் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் எரசக்கநாயக்கனூரில் உள்ள 10-க்கு மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை மற்றும் நேந்திர வாழைகள் குலையுடன் முறிந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடந்த சில தினங்களாக வாழைக்கு போதிய விலை இன்றி இருந்தது. தற்போது செவ்வாழை மற்றும் நேந்திரம் வாழை தார்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமாகிவிட்டன.
இதனால் எங்களுக்கு பல லட்சம் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தகவலறிந்த உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுணன் தலைமையில் வருவாய்த்துறையினர் எரசக்கநாயக்கனூர் பகுதிக்கு நேரில் சென்று மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story