கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி


கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி
x
தினத்தந்தி 10 April 2022 10:15 PM IST (Updated: 10 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி பவனி சென்றனர்.

விழுப்புரம், 

ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் வஸ்திரங்களை விரித்து, மரக்கிளைகளை போட்டு, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா’ என்று கூறி ஆர்ப்பரித்தார்கள் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதை நினைவு கூரும் வகையில் லெந்து காலத்தின் கடைசி வாரத்துக்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி குருத்தோலை ஞாயிறான நேற்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனியாக சென்றனர்.

பவனி

விழுப்புரம் தூய ஜேம்ஸ் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அருட் தந்தை தலைமையில் குருத்தோலை ஏந்தி  கிறிஸ்தவர்கள் பவனியாக ஆலயத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் விழுப்புரம் நகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், தூய ஜேம்ஸ் ஆலயம், கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியார் ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனியாக சென்றனர்.

ஈஸ்டர் பண்டிகை

லெந்து காலத்தின் கடைசி வாரமான இந்த வாரம் பெரிய வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் வருகிற வியாழக்கிழமை கட்டளை வியாழனாகவும், 15-ந்தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடைபிடிக்கப் படுகிறது. வருகிற 17-ந் தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

Next Story