கோவை-வாளையாறு தண்டவாளத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
ரெயிலில் காட்டு யானைகள் அடிபட்டு இறப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கோவை-வாளையாறு இடையே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் என்ஜினில் பயணம் செய்து நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை
ரெயிலில் காட்டு யானைகள் அடிபட்டு இறப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கோவை-வாளையாறு இடையே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் என்ஜினில் பயணம் செய்து நேரில் ஆய்வு செய்தனர்.
ரெயில் மோதி யானைகள் சாவு
கோவை-வாளையாறு இடையே ஏ மற்றும் பி என 2 தண்டவாளங்கள் உள்ளன. இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி ரெயில் மோதியதில் 3 காட்டு யானைகள் பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காட்டு யானைகள் இறந்தது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், இளந்திரையன் ஆகியோர் நேற்று கோவை வந்தனர். இவர்கள் போத்தனூரில் இருந்து வாளையாறு வரை ஒரு ரெயில் என்ஜினில் பயணம் செய்து அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு இறந்த இடங்களில் அந்த சம்பவங்கள் குறித்து லோகோ பைலட் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், நீதிபதிகளிடம் விளக்கினர்.
கண்காணிப்பு கோபுரங்கள்
இந்த ஆய்வின் போது நீதிபதிகள், ரெயில்வே தண்டவாள பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சோலார் விளக்குகள், வாளையாறு பகுதியில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக தேனீயின் சத்தம் போன்று ஒலி எழுப்பும் அலாரம் கருவியை நேரில் பார்வையிட்டு அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் புதர்களை அகற்றி சரிவுகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
வாளையாறு ரெயில் நிலையத்தில் வைத்து நீதிபதிகள், பாலக்காடு கோட்ட ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரகுமான், கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். அப்போது காட்டு யானைகளை பாதுகாக்க வெளிநாட்டில் இருந்து யானை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை பெற்று செயல்படும்படி அறிவுறுத்தினர்.
சரக்கு ரெயில்கள்
வனத்துறையினர் கூறும்போது, கோவை-வாளையாறு இடையே பயணிகள் ரெயிலை மட்டும் இயக்க வேண்டும், கேரளாவிற்கு வரும் சரக்கு ரெயில்களை போத்தனூர்-பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து கோவை கோட்ட வன அலுவலர் அசோக்குமார், ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுக்க எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது கோவை-வாளையாறு இடையே குறிப்பிட்ட அந்த இடங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை 45 கிலோ மீட்டர் வேகத்திலும், பகலில் 65 கி.மீ. வேகத்திலும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
கேரளாவிற்கு தேவையான தானியங்கள், உரங்கள் உள்ளிட்டவை வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் என்றால் கூடுதலாக 50 கி.மீ. பயணிக்க வேண்டியது உள்ளது.
மேலும் இந்த பகுதியில் உயர்த்தப்பட்ட ரெயில் தடத்தை அமைக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 கோடி செலவாகும். மேலும் இந்த திட்டத்தை முடிக்க நீண்டகாலம் பிடிக்கும் என்றும் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்-குன்னூர்
முன்னதாக நீதிபதிகள் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் உள்ள யானைகள் வழித்தடத்தை ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் சமீரன், முதன்மை தலைமை வன பாதுகாவலர் (பொறுப்பு) சையது முசம்பில் அப்பாஸ், மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் வனத்துறை, ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story