கோவையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி
கோவையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.
கோவை
கோவையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.
குருத்தோலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார். அப்போது எருசலேம் நகரை சுற்றிலும் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு சென்றனர்.
இது தாழ்மையின் ரூபம் என்று பைபிள் கூறுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர்.
பவனி
இதன்படி, நேற்று கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. கோவை காந்திபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு பவனி ஆலயம் முன்பாக தொடங்கியது.
இதில், ஆலய போதகர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் தேவராஜ் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காந்திபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்திவாறு ஓசன்னா... ஓசன்னா... என்ற கீதம் பாடியபடி சென்றனர்.
இந்த ஊர்வலம் காந்திபுரம் 5-வது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவைப்புதூரில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலய போதகர் வின்சென்ட் தலைமையில் குருத்ேதாலை பவனி நடந்தது.
சிறப்பு திருப்பலி
இதேபோல் கோவை பெரியகடைவீதி புனித மைக்கேல் பேராலயத்தில் கத்தோலிக்க பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
இதில் பங்கு குரு ஜான்ஜோசப், மறை மாவட்ட பொருளாளரும், முதன்மை குருவுமான பிரான்சிஸ் ஜோசப், வட்டார முதன்மை குரு ஜார்ஸ் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குருத்தோலைகளால் தயாரிக்கப்பட்ட சிலுவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கோவை ராமநாதபுரம் உயிர்த்த இயேசு ஆண்டவர் ஆலயத்தில் பங்கு குரு உபகாரம், ஒண்டிபுதூர் புனித ஜோசப் ஆலயத்தில் பங்கு குரு ஆரோக்கியசாமி, கோவைப்புதூரில் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்கு குரு வினோத், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆயலத்தில் பங்கு குரு ததேயூஸ் தலைமையிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
புனித தாமஸ் தேவாலயத்தில் கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் பால் ஆலப்பட் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் பங்கு குருக்கள் ஷாஜன் சிறம்பன், ஜஸ்டின் பூழிகுன்னல், ஜோபி கொச்சுபுரயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளி
இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்றனர். மேலும் கிறிஸ்தவ ஆலங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக 14-ந் தேதி புனித வியாழன், அதனைத்தொடர்ந்து இயேசுவை சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில், 15-ந் தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
பின்னர் இயேசு உயிர்தெழுந்த தினத்தை நினைவு கூறும் வகையில், 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Related Tags :
Next Story