பொள்ளாச்சி வால்பாறையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி


பொள்ளாச்சி வால்பாறையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி
x
தினத்தந்தி 10 April 2022 11:59 PM IST (Updated: 10 April 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

குருத்தோலை ஞாயிறையொட்டி வால்பாறை, பொள்ளாச்சியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.

வால்பாறை

குருத்தோலை ஞாயிறையொட்டி  வால்பாறை, பொள்ளாச்சியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர். 

கிறிஸ்தவர்கள் தவக்காலம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார்.

 அப்போது அவருடன் சென்றவர்கள் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு சென்றனர். இது தாழ்மையின் ரூபம் என்று பைபிள் கூறுகிறது. 

குருத்தோலை பவனி

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி  குருத்தோலை ஞாயிறு என்பதால் பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது. 

பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. ஆலய பங்குகுரு ஜேக்கப் தலைமை தாங்கினார். 

எல்.எம்.எஸ். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் வந்து முடிந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதுபோன்று பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிற்றையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

வால்பாறை

வால்பாறையில் சி.எஸ்.ஐ. மற்றும் தூய இருதய ஆலய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து குருத்தோலை பவனி சென்றனர். இந்த பவனிக்கு தூய இருதய ஆலய பங்கு குரு மரியஜோசப், சி.எஸ்.ஐ. ஆலய தலைமை ஆயர் சுந்தர்சிங் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.  

ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கிய பவனி சி.எஸ்.ஐ. வந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

புனிதவெள்ளி

இந்த தவக்காலத்தின் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளான புனிதவெள்ளி வருகிற 15-ந் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.  

அதுபோன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் அதிகாலையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

1 More update

Next Story