கல்லிடைக்குறிச்சி மணல் கடத்தல் வழக்கு; கனிம வளத்துறை பெண் அதிகாரி கைது
கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணல் கடத்திய வழக்கு தொடர்பாக கனிம வளத்துறை பெண் அதிகாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணல் கடத்திய வழக்கு தொடர்பாக கனிம வளத்துறை பெண் அதிகாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
மணல் கடத்தல்
நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல் எடுப்பதாக கூறி அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்த பகுதியில் பட்டா நிலங்களில் உள்ள மணலை எடுத்து கழுவி நல்ல மணலாக்கி அதை கடத்துவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் கிறிஸ்டி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மணல் கடத்தல் சம்பந்தமான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, எம்.சாண்ட் மணலுக்கு பதிலாக பட்டா நிலத்தில் உள்ள மணலை கடத்தியதாக கேரளாவை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். பலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இதற்கிடையே கேரள மாநிலம் பத்தனம்திட்டா கிறிஸ்தவ டயோசீசனுக்கு பாத்தியப்பட்ட நிலம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ளது. அங்கிருந்து அந்த மணலை எடுத்து கழுவி கடத்தப்பட்டது. இதுசம்பந்தமாக பத்தனம்திட்டா டயோசீசன் பிஷப் சாமுவேல் மாரி ஏரேனியஸ் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
பெண் அதிகாரி கைது
இந்த நிலையில் இந்த மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அப்போதைய நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குனர் சபியா (வயது 38) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
சபியா தற்போது நீலகிரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சமீர் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் போலீசார் இதுவரை 32 பேரை கைது செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story