சொத்து வரி உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும்


சொத்து வரி உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும்
x
தினத்தந்தி 11 April 2022 1:23 AM IST (Updated: 11 April 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

கும்பகோணம்:
சொத்து வரி உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். 
ஆர்ப்பாட்டம் 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்காவில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில்  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சொத்து வரி உயர்வு என்ற பெயரில் அரசு தமிழக மக்கள் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றி உள்ளது. இதை சொத்துவரி உயர்வு என்று சொல்வதைவிட சொத்தை எடுத்துக்கொள்ள போட்ட வரி உயர்வாக கருத வேண்டும். கொரோனா கால நிலையில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. மக்கள் மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வரி உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும்.
கணினி, சைக்கிள் தி்ட்டங்கள் நிறுத்தம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியபோது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி போராட்டம் அறிவித்தார். தற்போது மத்திய அரசின் நிர்பந்தத்தால் தான் சொத்து வரியை உயர்த்தியதாக கூறுகிறார். அப்படி என்றால் மத்திய அரசு நிர்பந்தித்தால் முதல்-அமைச்சர்  எல்லாவற்றையும் செய்துவிடுவாரா? பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.111-க்கும், டீசல் ரூ.108-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம், அம்மா கிளினிக் ஆகியவற்றை மூடிவிட்டனர்.  
பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய கணினி, சைக்கிள் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் பேசினார். 
முடிவில் மாநகர செயலாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story