‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்கள் நின்று செல்லுமா?
கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையத்தில் இருந்து தினமும் ஈரோடு மற்றும் கரூரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஏராளமானோர் சென்று பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் பஸ்களும் சோளிக்காளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது கிடையாது. இதனால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கரூர்- ஈரோடு செல்லக்கூடிய அரசு பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சோளக்காளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி.
பழுதடைந்த குடிநீர் தொட்டி
அந்தியூர் அருகே புதுப்பாளையம் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே மிகவும் பழுதடைந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் உள்ள 4 தூண்களிலும் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது புதிதாக குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.
சேகர், புதுப்பாளையம்.
குப்பையை அகற்ற வேண்டும்
கோபி டவுன் பகுதியில் தெப்பக்குளம் அருகே சிறிய மூட்டைகளில் குப்பைகளை கட்டி போட்டு உள்ளனர். இதில் காய்ந்த இலைகள், செடி, கொடிகள் ஆகியவை உள்ளன. அங்கு குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் 2 கோவில்கள் உள்ளன. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மூக்கை பிடித்துக்கொண்டே செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பாலம் சரி செய்யப்படுமா?
அந்தியூரை அடுத்த வேம்பத்தியில் இருந்து பொதியாமூப்பனூர் செல்லும் சாலையில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் கைப்பிடிச் சுவர் இல்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் கைப்பிடி சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
தார்சாலை அமைக்கப்படுமா?
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கரளியம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் சாலையில் புதிதாக தார் ரோடு போட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை ரோடு போடப்படவில்லை. இதனால் கற்கள் பெயர்ந்து ரோடு மிகவும் கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்களின் டயர்களை கற்கள் பதம் பார்த்துவிடுகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கடம்பூர்.
பழுதடைந்த ரோடு
கோபி கிருஷ்ணன் வீதி பகுதியில் காட்டு கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் குழி மூடப்பட்டது. ஆனால் குழி சரிவர மூடப்படவில்லை. இதனால் ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
Related Tags :
Next Story