புதிய முறையில் குறுமிளகு நாற்றுகள் உற்பத்தி


புதிய முறையில் குறுமிளகு நாற்றுகள் உற்பத்தி
x
தினத்தந்தி 11 April 2022 8:23 PM IST (Updated: 11 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் தோட்டக்கலை பண்ணையில் புதிய முறையில் குறுமிளகு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடலூர்

கூடலூர் தோட்டக்கலை பண்ணையில் புதிய முறையில் குறுமிளகு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தோட்டக்கலை பண்ணை

கூடலூர் பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு இணையாக காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்களும் விளைகிறது. இது தவிர கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேந்திரன் வாழை, நெல், பாக்கு மற்றும் காய்கறிகள் விளைகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்து வருகிறது. 

இதை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பணப்பயிர்களை நடவு செய்து வருகின்றனர். இதற்காக கூடலூர் தோட்டக்கலைத்துறை சார்பில் பொன்னூர் பகுதியில் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான தேயிலை, காபி, குறுமிளகு, பாக்கு உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரே நேரத்தில் 40 நாற்றுகள்

தற்போது கோடை காலமாக உள்ள நிலையில் வருகிற மழைக்காலத்தில் தேவை அதிகரிக்கும் என்பதால் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக குறுமிளகு நாற்றுகள் அதிகமாக உற்பத்தி செய்வதற்காக தோட்டக்கலைத்துறையினர் புதிய முறையை கையாண்டு வருகின்றனர். 

மூங்கிலை இரண்டாக பிளந்து ஒரு பகுதியில் மண், சாணம் கலந்த கலவையை நிரப்பி 45 டிகிரி கோணத்தில் சரித்து வைத்து குறுமிளகு நாற்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த முறையால் ஒரு செடியில் இருந்து 40 நாற்றுகள் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடிகிறது.

நோய் பாதிப்பு குறைவு

இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-
புதிய முறையால் மூங்கிலில் வளர்க்கப்படும் குறுமிளகு செடிகளின் வேர்களில் இருந்து உற்பத்தியாகும் நாற்றுகள் தனித்தனியாக வெட்டி எடுக்கப்படுகிறது. 

பின்னர் பிளாஸ்டிக் பைகளில் நடவு செய்யப்படுகிறது. இந்த முறையால் நாற்றுகள் அதிகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. மேலும் நோய் பாதிப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story