ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சந்தன கட்டைகள் கடத்தல்; 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சந்தன கட்டைகள் கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2022 9:04 PM IST (Updated: 11 April 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் வாகன சோதனையின்போது, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் சிக்கியது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் இருந்து, சத்யவேடு செல்லும் சாலையில் நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில், கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 மூட்டைகளில் இருந்து சந்தன நறுமணம் வீசியது.

அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அவற்றில் விலை உயர்ந்த சர்வதேச தரம் வாய்ந்த, 51 கிலோ எடைகொண்ட சந்தன மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு மரக்கட்டைகளும் சுமார் 1 அடி நீளமுள்ளதாக காணப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.

3 பேர் கைது

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சந்தன மரக்கட்டைகள் சென்னைக்கு காரில் கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக, கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த நசீர் அகமது (வயது 25), அர்பாஸ் (25) கொல்கத்தாவை சேர்ந்த சர்பரஸ் அலி (37) ஆகிய 3 பேரையும் கவரைப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்த கடத்தல் வழக்கில் பிடிபட்ட கார், பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கும்மிடிப்பூண்டி வனச்சரகர் சுரேஷ் பாபுவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story