மனைவியை கொல்ல முயன்ற தொழிலாளி கைது
மனைவியை கொல்ல முயன்ற தொழிலாளி கைது
திருப்பூர்:
திருப்பூரில், தலையில் கல்லை தூக்கிப்போட்டு மனைவியை கொல்ல முயன்ற சுமை தூக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுமைதூக்கும் தொழிலாளி
திருப்பூர் சூசையாபுரத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 49). இவர் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் சுமைதூக்கும் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி (42). கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த ஒருவாரத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருடைய மகன் விஜய் (22) தனது தாயாரை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு மீனாட்சி திருப்பூர் வந்து சந்தைப்பேட்டைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் மதுபோதையில் உழவர் சந்தைக்கு முன் அமர்ந்து பேசியதாக தெரிகிறது.
தலையில் கல்லை தூக்கிப்போட்டார்
இந்தநிலையில் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அன்புச்செல்வன் அங்கு கிடந்த கல்லை எடுத்து மீனாட்சியின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மீனாட்சியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விஜய் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அன்புச்செல்வனை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story