கோவில் திருவிழாவில் பங்கேற்க ஒரு சமுதாயத்தினர் ஒதுக்கிவைப்பு


கோவில் திருவிழாவில் பங்கேற்க ஒரு சமுதாயத்தினர் ஒதுக்கிவைப்பு
x
தினத்தந்தி 11 April 2022 10:37 PM IST (Updated: 11 April 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் பங்கேற்க ஒரு சமுதாயத்தினர் ஒதுக்கிவைப்பு

திருப்பூர்:
திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பங்கேற்க ஒரு சமுதாயத்தினரை ஒதுக்கிவைத்து தீண்டாமை வன்கொடுமை கடைபிடிக்கப்படுவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று திருப்பூர் கலெக்டரிடம் முறையிட்டனர்.
மாரியம்மன் கோவில்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளியில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் மைலம்பாளையம், வடுகபாளையம், குளியக்காடு, வெள்ளிரவெளி, ரங்கநாய்க்கனூர், பாப்பாவலசு, தேவணம்பாளையம் ஆகிய 7 கிராமங்களில் வசிக்கும் அனைத்து தரப்பு சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து திருவிழாவில் பங்கேற்று வந்தோம். கோவில் நிர்வாகம் நிர்ணயம் செய்யும் திருமாங்கல்ய வரியை ஒவ்வொரு சமுதாய மக்களிடம் இருந்து கோவில் நிர்வாகம் வசூல் செய்து ரசீது வழங்கி வந்தனர்.
தீண்டாமை வன்கொடுமை
இந்தநிலையில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. திருவிழாவின் கடைசிநாளில் கூட்டம் அதிகம் காரணமாக சிறு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கோவில் தர்மகர்த்தா வந்து, எங்கள் சமூகமான போயர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த கோவில் முன் ஆடக்கூடாது என கூறினார். இதுகுறித்து கேட்டதற்கும் ஜாதி பெயரை சொல்லி திட்டினார். அதன்பிறகு போயர் சமுதாய மக்களிடம் திருமாங்கல்ய வரி வாங்கமாட்டோம். மாவிளக்கு எடுக்கக்கூடாது. சலங்கை ஆட்டம் ஆடக்கூடாது என கூறி 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை ஒதுக்கிவைத்து விட்டனர்.
தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை ஒதுக்குவது நியாயமில்லை என்றும் கூறினோம். இருப்பினும் ஒதுக்கிவைத்துள்ளனர். தீண்டாமை வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், நாங்கள் கோவிலில் அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கவும், எங்கள் உரிமையை மீட்டுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
நிறுத்தப்பட்ட டவுன் பஸ்
பல்லடம் பருவாய் அருகே ஆறாக்குளம், கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் நிலம் புறம்போக்கு குட்டை என்று உள்ளது. ஆனால் நீர்தேங்கவில்லை. சமமாகவே உள்ளது. எனவே இந்த பூமியை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நத்தமாக வகைமாற்றம் செய்து வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், ‘கரைப்புதூர் ஊராட்சி கணபதிபாளையம் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கணக்கம்பாளையத்தில் இருந்து கணபதிபாளையம் வரை 38-ம் நம்பர் டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த பஸ் அதன்பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் வசதியின்றி தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
534 மனுக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக 534 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story