விவசாயத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்
விவசாயத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக்கோரி விவசாயிகள் சைக்கிளில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை
விவசாயத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக்கோரி விவசாயிகள் சைக்கிளில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை வாங்கி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் சைக்கிளில் வந்தனர். பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
விலை உயர்வால் பாதிப்பு
கோவை மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி ஏராளமானோர் உள்ளனர். தற்போது விவசாயத்திற்கு டிராக்டர், டில்லர், பொக்லைன், டிப்பர் உள்ளிட்டவற்றை பயன்படுத்திதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
சரக்கு வாகனங்களை பயன்படுத்திதான் விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் பயிர்களுக்கு மருந்து தெளிக்க ஸ்பிரேயர் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
சில இடங்களில் விவசாயிகள் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் நிலை உள்ளது. இவைகள் அனைத்திற்கும் பெட்ரோல், டீசல் மூலப்பொருட்களாக உள்ளது.
ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணத வகையில் நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து எந்திரங்கள் மற்றும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்லும் வாகனங்களின் வாடகையும் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும்தொகையை செலவிட வேண்டியது உள்ளது. ஏற்கனவே உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மானிய விலையில் பெட்ரோல், டீசல்
எனவே விவசாயிகளின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விவசாயத்திற்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் தூய்மை பணியாளர்கள் அளித்த மனுவில், ஊராட்சி மன்ற தலைவரால் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 14 சதவீத அகவிலைப்படி மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story