தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு


தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 11 April 2022 11:01 PM IST (Updated: 11 April 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் சொத்துவரி உள்பட 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

கோவை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் சொத்துவரி உள்பட 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்தார். ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசினர்.

அதன் விவரம் வருமாறு:-

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (தி.மு.க.):- மாநகராட்சியில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசு தான் காரணம். அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படாததால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியவர்களிடம் ஆண்டுதோறும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும். 

சிறுவாணி அணை கொள்ளவு

மத்திய மண்டல தலைவர் மீனா லோகு (தி.மு.க.):- வார்டு பகுதிகளில் குப்பைகளை அள்ள சிறிய வாகனங்கள் வருகின்றது. இதனால் அதிக குப்பைகளை அள்ள முடியாமல் தேக்கம் அடைகிறது. எனவே ஒரு டிப்பர் லாரி கொண்டு வந்தால் 4 சிறிய வாகனங்களில் அள்ளக்கூடிய குப்பையானது ஒரே வாகனத்தில் அள்ளி செல்லப்படும். 

மேலும் கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல் கோவையிலும் ஒதுக்க வேண்டும்.

அழகு ஜெயபாலன் (காங்கிரஸ்):- சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான 50 அடி வரை தண்ணீர் தேக்க கேரள அரசுடன் தமிழக அரசு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கலாம். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

சொத்து வரி உயர்வு தீர்மானம்

சித்ரா வெள்ளிங்கிரி (ம.தி.மு.க.):- சொத்து வரி உயர்வை 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.

பிரபாகரன் (அ.தி.மு.க.):- கோவையில் கடந்த 10 மாதங்களாக பூங்காக்களில் பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார்.

இதற்கு மீனாலோகு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக எதுமே பராமரிக்கப்படவில்லை, வளர்ச்சி பணிகளும் இல்லை. கடந்த 10 மாதங்களாக தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. தவறான தகவலை தர வேண்டாம் என்றார்.

மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு உள்பட 18 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தள்ளு, முள்ளு

சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா சந்திரசேகர் உள்ளிட்டோர் பேசினர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் சொத்து வரி உயர்வை தள்ளி வைக்கும்படி கூறினார்.

அப்போது அவருக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வெளிநடப்பு

இதையடுத்து சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகிய 3 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும் சொத்து வரி உயர்வை 50 சதவீதமாக குறைக்க கோரினர். 

மேலும் பெரும்பாலான கவுன்சிலர்கள் குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் அகற்றுவது குறித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் கல்பனா அறிவித்தார்.

சைக்கிளில் வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள்

முன்னதாக சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் டாக்டர் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கருப்பு ஆடை அணிந்து வந்திருந்தனர்.

இதேபோல் பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சைக்கிளில் வந்தனர்.


அ.தி.மு.க. கவுன்சிலர் 2 கூட்டத்தில் பங்கேற்க தடை

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் சொத்துவரி உயர்வு தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் சொத்துவரி உயர்வு குறித்த மாநகராட்சி தீர்மானத்தை கிழித்து எறிந்தாக கூறி மேயர் அவரை அடுத்து வரும் 2 மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதித்து உத்தரவிட்டார்.

Next Story