விவசாயிகள்-வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், 6 பயனாளிகளுக்கு ரூ.43 ஆயிரத்து 935 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 6 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், "மயிலாடும்பாறை ரேஷன் கடையில் இருந்து அரிசி, கோதுமையை கடைக்கு எதிரே உள்ள அரிசி அரவை மில்லுக்கு மொத்தமாக கொடுத்ததை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சவுந்தரபாண்டி தலைமையில் பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் 2007-ம் ஆண்டு அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். இதேபோல், தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்க மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் மேல்சட்டை இன்றி அரைநிர்வாண கோலத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சீர்மரபினர் சமுதாயங்களை சேர்ந்த மக்களுக்கு டி.என்.டி. என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
Related Tags :
Next Story