பொள்ளாச்சியில் மரம் விழுந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்

பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரம் விழுந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரம் விழுந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
பலத்த மழை
பொள்ளாச்சியில் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு இடையே சூறாவளி காற்றும் வீசியது. இந்த மழையால் மகாலிங்கபுரம், டி.கோட்டாம்பட்டி, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து ரோட்டில் ஆறாக ஓடியது. மேலும் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டிற்கு மாணவ- மாணவிகள் நனைந்து கொண்டு சென்றனர். பல்லடம் ரோட்டில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
மரம் சரிந்து விழுந்தது
மேலும் மழை காரணமாக பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள நகராட்சி வாகன நிறுத்தும் இடத்தில் இருந்த ராட்சத மரம் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மோட்டார் சைக்கிள்கள் சிக்கி கொண்டன. மேலும் மரம் விழுந்ததில் 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்த நேரம் அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மரத்தை வெட்டி அகற்றினர்
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் சியாமளா, ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு, மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதற்கிடையில் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிள்களை எடுக்க வந்தவர்கள் வாகனங்கள் சேதமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதேபோன்று ஆனைமலை, கோட்டூர் பகுதிகளிலும் மழை பெய்தது.
வால்பாறை
அதுபோன்று வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதை சாலை யில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மலைப் பாதை சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்ட படி சென்றனர்.
இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






