டாப்சிலிப்பில் வளர்ப்பு யானைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை

டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
பொள்ளாச்சி
டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
வளர்ப்பு யானைகள்
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி, வரகளியாறு ஆகிய இடங்களில் முகாம் உள்ளது. இங்கு வளர்ப்பு யானைகள் மற்றும் கும்கிகள் உள்பட 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் டெல்லி யானைகள் திட்ட ஆராய்ச்சியாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் வன கால்நடை டாக்டர் சுகுமார், சத்தியமங்கலம் சதாசிவம், சேத்துமடை கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழு மூலம் யானைகளின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
ரத்த மாதிரிகள் சேகரிப்பு
அப்போது புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர். முகாம்களில் உள்ள 19 யானைகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
8 ஆண் யானைகளுக்கு மதம் பிடித்து உள்ளதால் ரத்த மாதிரிகள் எடுக்க முடியவில்லை. மதம் குறைந்ததும் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
டி.என்.ஏ. பரிசோதனை
தமிழகத்தில் முதுமலை, டாப்சிலிப் ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இது தவிர கோவில்களில் யானைகள் பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், யானை தந்தங்கள் திருடுபோவதை தடுக்க யானைகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ரத்த மாதிரிகள் டேராடூன் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் அமைச்சகத்தின் செயலியில் பதிவு செய்யப்படும்.
இதன் மூலம் யானை எங்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும். தமிழகத்தில் முதல் முறையாக யானைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளை தொடர்ந்து கோவில் யானைகளுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






