சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 April 2022 12:06 AM IST (Updated: 13 April 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சுல்தான்பேட்டை

சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

சின்ன வெங்காயம் சாகுபடி

சமையலில் ருசியை கூட்டவும், உடலுக்கு சத்து மற்றும் குளிர்ச்சியை கொடுக்ககூடிய முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் திகழ்கிறது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜே.கிருஷ்ணாபுரம், மலைப்பாளையம், அய்யம்பாளையம், ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை உட்பட பல இடங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. 

தற்போது அவை அறுவடைக்கு தயாரானதால் சின்னவெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்து வருகிறார்கள். ஒரு கிலோ தரமான சின்ன வெங்காயம் ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

விலை வீழ்ச்சி

தற்போது அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- 

ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விதை, நடவு, உரமேலாண்மை, களை எடுத்தல், அறுவடை என குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. 60 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு 7 டன் வரை மகசூல் கிடைக்கும்.

கொள்முதல் 

கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.8-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, கொள்முதல் விலை சற்று அதிகரித்து உள்ளது. இருப்பினும் எங்கள் உழைப்பு மற்றும் பாதுகாப்பை கணக்கில் கொண்டால் இந்த கொள்முதல் விலை மிகவும் குறைவு தான். 

குறைந்தபட்சம் எங்களிடம் ரூ.20 முதல் ரூ.25-க்காவது கொள்முதல் செய்ய வேண்டும். அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய உரிய வசதி, உதவிகள் செய்ய வேண்டும். இதன் மூலம் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் வாழ்க்கை தரம் மேம்படும். 

நிவாரணம் வேண்டும்

சில விவசாயிகள் தங்கள் விளை நிலத்திலேயே பட்டரை அமைத்து அதில் சின்ன வெங்காயத்தை பாதுகாத்து வருகிறார்கள். இந்த பட்டரையில் 3 மாதம் முதல் 6 மாதம் வரை பாதுகாக்கலாம். 

தற்போது சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே விவசாயிகளை பாதுகாக்க, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story