மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைமை அலுவலகம் - அமைச்சர் திறந்து வைத்தார்

மாமல்லபுரத்தில் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைமை அலுவலகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கணினி அறை, தகவல்தொடர்பு சாதனங்களுடன் கூடிய அறை, 2022 செஸ் ஒலிம்பிக் போட்டி சேர்மன் அறை, போட்டி ஒருங்கிணைப்பாளர் அறை என அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை அலுவலகம் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், செஸ் ஒலிம்பிளயாட் போட்டிகள் நடைபெற உள்ள நட்சத்திர ஓட்டலின் அரங்கினை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு செஸ் வீரர்கள் ஓய்வு எடுக்கும் அறை, முக்கிய விருந்தினர்கள் வந்து தங்கும் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது:- சர்வதேச செஸ் ஒலியம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள், வீரர்கள் தங்கும் அறைகள் செலவு, உணவு உள்ளிட்டவைகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பதை, அகில இந்திய சதுரங்க போட்டி கூட்டமைப்புதான் முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் ஆனந்தகுமார், அகில இந்திய சதுரங்க போட்டி கூட்டமைப்பின் செயலாளர் பரத்சிங் சவுகான், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் முதுநிலை மேலாளர் பிரபுதாஸ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






