‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 16 April 2022 8:26 PM IST (Updated: 16 April 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

ஆபத்தான மரங்கள் அகற்றம்

பந்தலூர் அருகே பிதிர்காடு-பாட்டவயல் சாலையோரத்தில் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு மரத்தின் மீது மற்றொரு மரம் சாய்ந்து நின்றது. எப்போது வேண்டுமானாலும் சாலையில் 2 மரங்களும் சாலையில் விழும் நிலை இருந்ததால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஆபத்தான அந்த மரங்களை அதிகாரிகள் வெட்டி அகற்றினர். இதற்கு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

கதிர்வேல், பாட்டவயல்.

சுகாதாரமற்ற நிழற்குடை

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலக்கடை பகுதியில் பயணிக்ள நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர். ஆனால் அந்த நிழற்குடை முட்புதர்கள் சூழ்ந்து, சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை முறையாக பராமரிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ராஜா, அய்யன்கொல்லி.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து பூதாளக்குன்னு, பெருங்கரை வழியாக நெல்லியாளம் டேன்டீ பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு கூட வாகனங்கள் விரைவாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்து உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ரஜினிகாந்த், உப்பட்டி.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் காபி, குறுமிளகு மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இதனால் விளைந்த வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க கூடலூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேளாண் பொருட்களை உரிய நேரத்தில் சந்தைப்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, கூடலூர்.

தெருநாய்கள் தொல்லை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம், நந்தனார் காலனி, உடுமலை மெயின் ரோடு, தேர்நிலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நடைபயிற்சி செய்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். அவர்களை தெருநாய்கள் துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

முகமது, பொள்ளாச்சி.

விபத்து அபாயம்

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையின் தடுப்பில் செடிகள் உள்பட முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை செடிகள் பதம் பார்த்து விடுகின்றன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் முன் அதிகாரிகள் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜய், ஊஞ்சவேலாம்பட்டி.

போக்குவரத்து நெரிசல்

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சாலையின் ஓரத்தில் சிலர் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால் போக்குவரத்து போலீசார் விதிமுறையை மீறும் வாகனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் நான்கு வழிச்சாலை, இருவழிச்சாலையாக மாறி விட்டது. எனவே போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, பொள்ளாச்சி.

மின் இணைப்பு இல்லை

சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனலட்சுமி நகரில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் சோலார் விளக்குகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் அது போதுமானதாக இல்லை. இதனால் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் விரைவாக நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

பிரதீப், சூலூர்.

சுகாதார சீர்கேடு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.புதூர் பகுதியில் சாலையோர சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. அந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளதோடு மூடப்படாமலும் காணப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை சரி செய்து, உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

லெனின், சாய்பாபா காலனி, கோவை.

தெருவிளக்குகள் ஒளிருமா?

கோவை மாநகராட்சி 89-வது வார்டு சுண்டக்காமுத்தூர் ராயப்பா நகரில் உள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பங்கள் நடைபெற வழி வகுக்கிறது. எனவே அங்கு பழுதாகி உள்ள தெருவிளக்குகளை ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகராஜ், சுண்டக்காமுத்தூர்.

1 More update

Next Story