தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சாலையில் அபாய குழி
கோவை ரெயில்நிலையம் சாலையில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னர் அந்த ரோட்டில் தற்காலிக மாக தார் சாலை அமைக்கப்பட்டது. அந்த தார் சாலை தற்போது பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் ஆபத்து உள்ளது. எனவே போக்குவரத்து மிகுதியான அந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
சத்யா, உக்கடம்.
ஆபத்தான குளியல்
பொள்ளாச்சி அருகே மிகவும் பிரசித்திபெற்ற ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் கீழ்ப்பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை ஆழம் அதிகமாக கொண்டதுடன் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. ஆனால் இது தெரியாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தடுப்பணையில் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள். எனவே விபரீத சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வேண்டும்.
சிவக்குமார், ஆனைமலை.
ஓட்டை விழுந்த குப்பைதொட்டி
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சர்ச் ரோடு அருகே 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை ஓட்டை விழுந்து காணப்படுவதால், தொட்டிக்குள் கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் கீழே விழுகிறது. இதனால் அங்கு சுற்றும் தெருநாய்கள் அந்த குப்பைகளை சாலைக்கு கொண்டு வந்து போடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து ஓட்டை விழுந்த குப்பை தொட்டிகளை மாற்றி நல்ல தொட்டிகளை வைக்க வேண்டும்.
சந்திரகலா, ராமநாதபுரம்.
பொதுக்கழிப்பிடம் இல்லை
கோவை மாநகராட்சி 100-வது வார்டு பகுதியான கணேசபுரம், குழியூர், விட்டல் நகர், முல்லை நகர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இங்கு பொதுக்கழிப்பிடம் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் திறந்த வெளியே கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அத்துடன் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், முதியோர் அனைவரும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இங்கு பொதுக்கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும்.
தங்கராஜ், கணேசபுரம்.
சாலை தடுப்புகள் வேண்டும்
மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் சிறுமுகை, காரமடை சாலை சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு சாலை மிகவும் அகலமாக இருப்பதால் இந்த வழியாக வரும் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதன் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. சாலையை கடந்து செல்லும் வாகனங்களும் கவனிப்பது கிடையாது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் அங்கு சாலை தடுப்பான்கள் வைத்து விபத்து நடப்பதை தடுக்க வேண்டும்.
சபாபதி, மேட்டுப்பாளையம்.
அடிக்கடி விபத்து
கோவை கணபதியை அடுத்த மணியக்காரன்பாளையம் மெயின் ரோட்டில் குடிநீர் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த பின்னரும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயங்களுடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, மணியகாரன்பாளையம்.
மின்ஒயரால் ஆபத்து
கோவை அவினாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இதன் முன்புறம் தினமும் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். ஆனால் இங்குள்ள மரம் அருகில் ஆபத்தான முறையில் மின்சார ஒயர் செல்கிறது. இதனால் அங்கு நிற்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான முறையில் இருக்கும் இந்த மின்சார ஒயரை சரிசெய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பாலசுப்பிரமணியம், வெள்ளலூர்.
துர்நாற்றத்தால் அவதி
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பஸ் நிறுத்தத்தில் சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவை சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் அதற்குள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் உள்ளே சென்றால் நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இங்கு செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த கழிப்பிடத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
குமார், கோவை.
மேம்பாலத்தில் கழிவுகள்
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் அடிக்கடி கழிவுகள் வீசப்படுகிறது. குறிப்பாக பஞ்சுகள், சாலை ஓரத்தில் வீசிவிட்டு செல்வதால், அவை காற்று வீசும்போது பறந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது படுவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வழியாகதான் தினமும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் அதை கவனித்து நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மேம்பாலத்தில் போடப்பட்டு இருக்கும் அனைத்து கழிவுகளையும் அகற்ற வேண்டும்.
துரைபாண்டி, காந்திபுரம்.
வேகமாக செல்லும் வாகனங்கள்
கோவையை அடுத்த கோவைப்புதூர் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் செல்கிறது. அத்துடன் இந்த வாகனங்கள் அதிவேகமாகவும் செல்வதுடன், ஏர் ஹார்னரை ஒலித்தபடி செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து வேகமாக செல்லும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, கோவைப்புதூர்.
Related Tags :
Next Story






