தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 17 April 2022 6:35 PM GMT (Updated: 2022-04-18T00:05:25+05:30)

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி அளித்தார்

சிவகங்கை, 
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜ.க. அரசாங்கம் வந்த பிறகு இந்தியாவில் பொருளாதாரம் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.வரி, மற்றும் கொரோனா பரவல் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணமும் தராதது ஆகியவற்றால் பொருளாதாரம் பாதிக்கப் பட்டது. அப்படி மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது அரசாங்கத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இளையராஜா மீது நான் மதிப்பு வைத்துள்ளேன். அவர் அவர் கருத்தை சொல்கிறார் என்று விட்டுவிடலாம். ஆனால் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது எனக்கு பொருத்தமாகப் படவில்லை. 
அம்பேத்கர் பெரிய மேதை இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் அவருக்கு தான் பெரும் பங்கு உண்டு. அந்த மேதையுடன் மோடியை ஒப்பிடுவது மோடிக்கு நல்லதல்ல. அண்ணா தி.மு.க. ஒரு பெரிய அரசியல்கட்சி ஆனால் அவர்களுக்கு தலைமை மீது உள்ள குழப்பத்தால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள். 
ஆனால் அவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கி அவர்களுக்கு இருக்கும் தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ய முடியாமல் திறமை இல்லாத தலைமையால் தவிக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம். பிரசாந்த் கிஷோர் இந்திய தேர்தல் புள்ளிவிவரங்களை நன்கு அறிந்தவர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறாரா இல்லை கட்சிக்கு செயல்படப் போகிறாராஎன்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அவருடைய யோசனைகளை பல பேட்டிகளில் பார்த்துள்ளேன். என்னை பொறுத்தவரை அது எல்லாம் உகந்த யோசனை தான். அதை அமல்படுத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். ரஷியா- உக்ரைன் போரில் இந்தியா நடுநிலையை தான் கடைப்பிடிக்கிறது. அங்கு போர் நிற்கவேண்டும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
இலங்கையில் நடந்தது ஒரு குடும்ப அரசாங்கம் ராஜபக்சேவினுடைய குடும்ப அரசாங்கம் குறிப்பாக சிங்கள வெறி அரசாங்கம் தவறான பொருளாதார கொள்கையினால் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் அவர்களின் வெளிநாட்டுக் கடனை கட்ட முடியாத அளவிற்கு மஞ்சள் பத்திரிக்கை கொடுக்கும் அளவிற்கு தான் அவர்கள் உள்ளனர். என்னை பொருத்தவரை இந்தியா நேரடியாக இதில் தலையிட வேண்டும்.
இந்தியா பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சில சலுகைகளை கொடுத்து உதவ வேண்டும். ஆனால் அந்த பொருளாதாரத்தை எப்படி செலவிடுவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.  நாம் நேரடியாக ஆலோசகர்களை அனுப்பி ஆவன செய்ய வேண்டும்.   தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க. தெளிவாக உள்ளது. பா.ஜ.க.வின் இந்தி இந்துத்துவா சாயலுள்ள அரசாங்கம் தமிழகத்திற்கு வர கூடாது. அப்படி இருக்கும் பொழுது காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.விற்கும் நல்ல உறவு உள்ளது. இந்த கூட்டணி தொடரும். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story