அரசு பஸ் மீது கல்வீச்சு தொழிலாளிகள் 2 பேர் கைது

அரசு பஸ் மீது கல்வீச்சு தொழிலாளிகள் 2 பேர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து ரமணமுதலிபுதூருக்கு தடம் எண் 17 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை கடந்த 17-ந்தேதி இரவு டிரைவர் அருண்பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார். கோட்டூர் அருகே ரமணமுதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் உள்ள வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பெத்தநாயக்கனூர் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோட்டூரை சேர்ந்த தொழிலாளிகள் ஹரிகிருஷ்ணன் (வயது 36), ராம்முருகன் (33) என்பதும், பஸ்சின் பின்புறம் கல்வீசியதும் தெரியவந்தது. மேலும் கோட்டூர் சந்தை பேட்டை பகுதியில் வைத்து பஸ் டிரைவர், ஹரிகிருஷ்ணன், ராம்முருகனை பார்த்து ஓரமாக செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரத்தில் பஸ்சை பின் தொடர்ந்து வந்து இருட்டான பகுதியில் வைத்து கல்வீசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவா்கள் 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






