கிணத்துக்கடவு அருகே ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணம் மோசடி


கிணத்துக்கடவு அருகே  ஏடிஎம் கார்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணம் மோசடி
x
தினத்தந்தி 19 April 2022 10:05 PM IST (Updated: 19 April 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே ஏ.டி.எம். கார்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே ஏ.டி.எம். கார்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

செல்போனில் அழைப்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களின் ஏ.டி.எம். கார்டுக்கு கால அவகாசம் முடிவடைவதால் உடனடியாக ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஏ.டி.எம். கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை உடனடியாக கூறுங்கள் என்று தெரிவித்து உள்ளார். இதனை உண்மை என நம்பிய ரங்கராஜ் தனது ஏ.டி.எம். கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் உங்களுக்கு வந்துள்ள ஓ.டி.பி. எண்ணை கூறவும் கூறியுள்ளார். அந்த எண்ணையும் ரங்கராஜ் கூறினார். இதையடுத்து முதல் கட்டமாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரமும், அடுத்த கட்டமாக ரூ.9 ஆயிரத்து 999-ம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்து 999 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாக ரங்கராஜின் செல்போனுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. மேலும் மர்மநபர் பேசிய இணைப்பும ்துண்டிக்கப்பட்டது. 

மோசடி

இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ் உடனடியாக  கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி மேலாளருக்கு தான் ஏமாற்றப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவரது வங்கி கணக்கை வங்கி மேலாளர் முடக்கி வைப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து ரங்கராஜ் கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறினார். 
இதனையடுத்து போலீசார் உடனடியாக சைபர்கிரைம் போலீசில் புகார் கூற அறிவுரை வழங்கினர். இதனையடுத்து ரங்கராஜ் சைபர் கிரைம் போலீசில்  புகார் செய்தார். அதன்பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். 

விழிப்புணர்வு

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- செல்போனில் யாராவது ஏ.டி.எம் பின் நம்பர் மற்றும் ஓ.டி.பி எண்கள், வங்கி கணக்கு குறித்த எந்த தகவல்களை கேட்டாலும் பொதுமக்கள் கூறவேண்டாம். அதை மீறி நீங்கள் கூறும் பட்சத்தில் உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்மநபர்கள் அபகரித்து விடுவார்கள். 
மேலும் செல்போன் மூலம் தங்களது வங்கிக் கணக்குகளை பின் நம்பரையும் கூறி பாதிக்கப்படும் நபர்கள் பாதிக்கப்பட்டது தெரிந்தவுடன் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு சைபர் கிரைம் போலீசில் செல்போன் மூலம் புகார் செய்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்கலாம். மேலும் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
1 More update

Next Story